top of page

fd

கடந்த வருடம் க.பொ.த உயர்தரப் பரீட்சையில் வடமாகாணத்திலேயே திறமையான பெறுபேறு – வடமாகாண ஆளுநர் பெருமிதம்

கடந்த வருடம் வடமாகாணம் கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சையில் திறமையான பெறுபேற்றை பெற்றுள்ளதென வடமாகாண ஆளுநர் ஜி.எ.சந்திரசிறி தெரிவித்துள்ளார்.

நேற்றைய தினம் யாழ் வேம்படி மகளீர் உயர்தரப் பாடசாலையில் நடைபெற்ற யாழ் வலயப் பாடசாலை மாணவர்களைக் கௌரவிக்கும் நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும் போது இவ்வாறு குறிப்பிட்டார்.

கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சையிலும் யாழ் மாவட்டப் பாடசாலைகள் சராரியான பெறுபேற்றை பெற்றுள்ளன. கல்விப் பொதுத் தராதர சாதாரணப் பரீட்சையில் ஏனைய மாவட்டங்களுடன் ஒப்பிடும்போது தரமான சித்தியை வடமாகாணம் பெற்றுள்ளதெனவும் தெரிவித்தார்.

வடமாகாண மாணவர்களுக்கு திறமையான கல்வியை வழங்க வேண்டும் என்ற ஜனாதிபதியின் திட்டதிற்கேற்ப பயங்கரவாதம் அழிக்கப்பட்டதைத் தொடர்ந்து வடமாகாணத்தில் உள்ள பாடசாலைகளை மீளக்கட்டியெழுப்பியுள்ளோம், அதற்கேற்ப அதிபர், ஆசிரியர்களை கோரிக்கைக்கு ஏற்ப வழங்கியுள்ளதாகவும் குறிப்பிட்டார்.

இதன் மூலம் மாணவர்களுக்கு கற்றல் கற்பித்தலுக்குரிய சகல வசதிகளையும் வழங்கியதன் மூலம் மாணவர்களுக்கு திறமான கல்வியை வழங்குவதற்கு அதிபர்கள் ஆசிரியர்கள் உறுதிப்படுத்த வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.

கடந்த வருடம் திட்டம் ஒன்றை அறிமுகம் செய்து அதனடிப்படையில் வடமாகாண கல்வி அமைச்சு அதிபர், ஆசிரியர்கள், கோட்டக் கல்வி அதிகாரிகள் அனைவரும் செயற்பட்டதன் மூலம் கல்விப் பொதுத் தாரதர சாதாரண தரப் பரீட்சையில் சிறந்த பெறுபேறுகளை வெளிக்காட்டியுள்ளனர். இருந்தும் பெறுபேறுகளை மேலும் உயர்த்துவதற்கு அதிபர் ஆசிரியர்கள் பாடுபட வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.

மாணவர்கள் தமது எதிர்கால வாழ்க்கைக்கு ஏற்ப மும்மொழிக் கொள்கைத் திட்டத்தையும் பெற்று பயனடைய வேண்டும். மும்மொழிக் கொள்கைத் திட்டத்தின் மூலம் மேலதிகமான தொழில்வாய்ப்பை பெற்றுக்கொள்ள உதவும், அதுமாத்திரமன்றி இணைப்பாடவிதான செயற்பாடுகளிலும் பங்குபற்றுவதன் மூலம் ஆரோக்கியமான நாட்டுக்குப் பயன்படக்கூடிய நல்ல பிரஜைகளாக உருவாக முடியும் எனவும் வடமாகாண ஆளுநர் ஜி.எ.சந்திரசிறி குறிப்பிட்டார்.

மேலும் வடமாகாணத்தில் இவ்வருட இறுதிக்குள் 24 தொடக்கம் 29 வரையிலான பாடசாலைகள் மகிந்த விஞ்ஞானகூட வசதிகளையும் பெற்றுக்கொள்ள முடியும் எனவும் தெரிவித்தார்.

மேலும் தகவல் தொழில்நுட்ப பாடங்களைக் கற்றுக்கொள்ள வேண்டும் எனவும் ஆலோசனை வழங்கியுள்ளார்.

 

யாழ். கல்வி வலயத்தில் 67.7 சதவீதமான மாணவர்கள் சித்தி - யாழ் வலயக் கல்விப் பணிப்பாளர்

கடந்த வருடம் நடைபெற்ற கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப்பரீட்சையில் யாழ். கல்வி வலயத்தில் 67.7 சதவீதமான மாணவர்கள் சித்தியினை பெற்றுள்ளனர் என யாழ். வலயக் கல்விப் பணிப்பாளர் உதயகுமார் தெரிவித்துள்ளார்.

யாழ்.வேம்படி மகளீர் உயர்தரப் பாடசாலையில் நேற்று நடைபெற்ற யாழ் கல்வி வலயப் பாடசாலை மாணவர்களை கௌரவிக்கும் நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும் போது இவ்வாறு தெரிவித்தார்.

கடந்த ஆண்டு நடைபெற்ற கல்விப் பொதுத்; தராதர சாதாரண பரீட்சையில் எமது வலயத்தில் 67.7 சதவீத மாணவர்கள் சித்தியெய்தினர் என்று குறிப்பிட்ட யாழ். வலயக் கல்விப் பணிப்பாளர் உதயகுமார் இவர்களில் 59 மாணவர்கள் 9 ஏ சித்தியினைப் பெற்றதுடன் 57 மாணவர்கள் 8 ஏ, பி சித்தியினையும் பெற்றுள்ளதாகவும் குறிப்பிட்டார்.

மேலும் மிகப்பெரிய எண்ணிக்கையான மாணவர்கள் சித்தி எய்தமையினால் யாழ் கல்வி வலயம் முன்னணியில் உள்ளதுடன் எமக்கு பெருமையும் தேடித்தந்துள்ளனர் என்றும் குறிப்பிட்ட யாழ்.வலயக் கல்விப் பணிப்பாளர் வேம்படி மகளீர் உயர்தரப் பாடசாலையானது தேசிய ரீதியில் 10 ஆவது இடத்தினைப் பெற்றுள்ளதுடன் தமிழ் மொழி மூல பாடசாலைகளில் முதலாவது இடத்தினையும் பெற்று சாதனை படைத்துள்ளது எனக் குறிப்பிட்டார்.

அதேபோல கடந்த வருடம் இடம்பெற்ற கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சையிலே 68 மாணவர்கள் 3 ஏ சித்தியினைப் பெற்றிருப்பதுடன் முதல் 4 இடங்களையும் யாழ் கல்வி வலயமே பெற்றுள்ளது என்றும், ஒவ்வொரு பாடசாலை அதிபர், ஆசிரியர்கள் முன்னெடுத்த செயற்பாட்டினால் இந்த வெற்றியைப் பெற முடிந்தது என தெரிவித்தார்.

நேற்று வேம்படி மகளீர் கல்லூரியின் பிரதான மண்டபத்தில் பிற்பகல் 3.00 மணிக்கு நடைபெற்ற மாணவர்கள் கௌரவிப்பு நிகழ்வில் யாழ்ப்பாண கல்வி வலயத்தை சேர்ந்த பாடசாலைகளில் கடந்த வருடம் ஐந்தாம் ஆண்டு புலமைப்பரிசில் பரீட்சையில் சித்தியெய்திய மாணவர்கள், கல்விப் பொதுத் தராதர சாதாரண தர பரீட்சையில் 9 ஏ சித்தி பெற்றவர்கள், கல்விப் பொதுத் தராதர உயர்தர பரீட்சையில் 3 ஏ பெற்ற மாணவர்கள் மற்றும் அதிக புள்ளிகளைப் பெற்ற பாடசாலை ஆசிரியர்கள், அதிபர்கள் ஆகியோருக்கும் விருதுகள் வழங்கி கௌரவிக்கப்பட்டது.

நேற்றைய நிகழ்வில் கடந்த வருடம் புலமைப்பரிசில் பரீட்சையில் 193 புள்ளிகளைப் பெற்றுக்கொண்ட பி.அபிராம், 191 புள்ளிகளைக் பெற்றுக்கொண்ட அச்சவேலி சென். திரேஸ் பெண்கள் வித்தியாலய மாணவி எல்.வைஸ்ணவி, மற்றும் யாழ் இந்து ஆரம்பப் பாடசாலையைச் சேர்ந்த கே.கீர்த்திகன் ஆகியோர் கௌரவிக்கப்பட்டனர்.

கல்விப் பொதுத் தராதர பத்திர உயர்தரத்தில் 3 ஏ சித்திகளைப் பெற்றுக்கொண்ட 69 மாணவர்களும், கல்விப் பொதுத் தாரதர சாதாரண தரத்தில் 9 ஏ சித்திகளைப் பெற்றுக்கொண்ட 53 மாணவர்களுக்கும், 8 ஏ பீ சித்தியினைப் பெற்றுக்கொண்ட 57 பேருக்கும் கௌரவிப்பு நடைபெற்றது.

இவர்களுக்கான விருதுகளை வடமாகாண ஆளுநர் ஜீ.ஏ.சந்திரசிறி வழங்கி வைத்தார். குறித்த கௌரவிப்பு நிகழ்வில் ஆளுநரின் செயலாளர் இளங்கோவன், வடமாகாண கல்விப் பணிப்பாளர் வைரமுத்து செல்வராசா, பிரதிக் கல்விப் பணிப்பாளர் அருணகிரிநாதன், யாழ் வலயக் கல்விப் பணிப்பாளர் உதயகுமார், மாகாண கல்வி திணைக்கள உத்தியோகத்தர்கள், வலையக் கல்விப் பணிமனை உத்தியோகத்தர்கள், யாழ் கல்வி வலய பாடசாலை அதிபர்கள், ஆசிரியர்கள் மாணவர்கள் எனப் பலரும் கலந்துகொண்டனர்.

 

bottom of page